ரத்த அழுத்தம் (BP) பரிசோதனைக்காக 10 நிமிடங்கள் காத்திருக்குமாறு கூறிய மருத்துவரை நோயாளி ஒருவர் தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ள இந்த காட்சி, இணையவாசிகள் மத்தியில் கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

சிசிடிவி கேமராவில் பதிவானதாக கூறப்படும் அந்த வீடியோவில், மருத்துவமனை ஆலோசனை அறையில் மருத்துவர் தனது மேசையில் அமர்ந்திருப்பதும், அப்போது நோயாளி ஒருவர் ரத்த அழுத்தம் பரிசோதனைக்காக வந்திருப்பதும் தெரிகிறது. பரிசோதனைக்கு முன்பு சில நிமிடங்கள் காத்திருக்குமாறு மருத்துவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், திடீரென ஆத்திரமடைந்த அந்த நபர் அருகில் இருந்த மேசையை எடுத்து மருத்துவரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இந்த தாக்குதலில் மருத்துவர் வலியுடன் தலையை பிடித்துக் கொள்ளும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். “10 நிமிடங்கள் காத்திருப்பதற்கே பொறுமை இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என பலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையில், சிலர் இந்த சம்பவத்தை கிண்டலாகவும் பதிவிட்டுள்ளனர். நோயாளியின் கோபமே அவரது ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதை காட்டுகிறது என்றும், மருத்துவரிடம் BP பரிசோதனை செய்ய வருவதற்கு முன்பே அதை அவர் நிரூபித்துவிட்டார் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், வீடியோவின் உண்மைத் தன்மை தனியாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், பணியில் இருக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்த சம்பவம் மீண்டும் எழுப்பியுள்ளது.