ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில், தனது மகளைக் காணவில்லை எனப் புகார் அளிக்க காவல் நிலையம் சென்ற தம்பதியினரை வழிமறித்து ஒரு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

பாபுலால் என்பவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது மருமகன் சோஹன்லால் தலைமையிலான எட்டு பேர் கொண்ட கும்பல் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

காரில் இருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்த அந்த கும்பல், பாபுலாலின் மனைவி கெலிதேவியை சரமாரியாகத் தாக்கியதோடு, கத்தரிக்கோலால் அவரது மூக்கை அறுத்து எறிந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த கெலிதேவி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது மகளின் செல்போன் மூன்று நாட்களாக அணைக்கப்பட்டிருந்ததால், அது குறித்து விசாரிக்கச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்ததாக பாபுலால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஜலோர் மாவட்டப் போலீசார், தலைமறைவாக உள்ள சோஹன்லால் மற்றும் அவரது கூட்டாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.