இந்தியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவர், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் கடுமையான உடல்நலப் பாதிப்பிற்காக மாதந்தோறும் ஒரு நாள் மருத்துவ விடுப்பு (Sick Leave) எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து மூன்று மாதங்கள் இவ்வாறு விடுப்பு எடுத்ததால் ஆத்திரமடைந்த மேனேஜர், அந்தப் பெண்ணை நேரில் அழைத்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “என் மனைவிக்கும் தான் மாதவிடாய் ஏற்படுகிறது, அவர் இதுபோல விடுப்பு எடுப்பதில்லை, அவர் வேலைக்குச் செல்கிறார்” என்று கூறி அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உடல்நலப் பிரச்சனையை மிக இழிவாகவும், பொறுப்பற்ற முறையிலும் மேனேஜர் விமர்சித்துள்ளார்.

ஒவ்வொரு மனிதருக்கும் வலியின் தாக்கம் மாறுபடும் என்பதை உணராமல், “உன் வலியைக் குறைத்து மதிப்பிடாதே, அதைத் தாங்கிக்கொள்ளப் பழகிக்கொள்” என்று மேனேஜர் அறிவுரை கூறியது அந்தப் பெண்ணை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், ரெடிட் (Reddit) தளத்தில் தனது குமுறலைப் பகிர்ந்துள்ளார். மேனேஜரின் அநாகரீகமான செயலால் அந்தப் பணியில் நீடிக்க விரும்பாமல் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அங்கும் அவருக்குச் சிக்கல் நீடித்துள்ளது.

அந்த மேனேஜர் தனது தந்தையுடன் சேர்ந்து நடத்தும் அந்த நிறுவனத்தில், அந்தப் பெண் முடித்த ஒரு பயிற்சிப் படிப்பிற்கான (Work-related course) கட்டணத்தை அவரது இறுதிச் சம்பளத்தில் கழிப்போம் என்று மிரட்டியுள்ளனர். இந்த விவகாரம் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் அந்த மேனேஜருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெண்களின் உடல்நலனைச் சிறுமைப்படுத்தும் இத்தகைய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.