பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் டரிக்கின் பந்துவீச்சு பாணி மீண்டும் ஒருமுறை சர்ச்சையை கிளப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான போட்டியின் போது, அவர் பந்தை வீசுவதற்கு முன்னதாக சுமார் இரண்டு வினாடிகள் அப்படியே சிலையாக நின்று பேட்டரின் நகர்வுகளை கணித்துவிட்டு பந்துவீசுவது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி விமர்சித்துள்ளார்.

மேலும் கால்பந்து போட்டிகளில் பெனால்டி கிக்கின் போது இது போன்ற செயல்முறைக்குத் தடை இருப்பது போலவே, கிரிக்கெட்டிலும் இத்தகைய தந்திரங்களுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உஸ்மான் டரிக்கின் கை 15 டிகிரிக்கும் அதிகமாக வளைவதாகவும் ‘சக்கிங்’ புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“>

இந்நிலையில் கோஸ்வாமியின் இந்த விமர்சனத்திற்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் பதிலடி கொடுத்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் எப்போதும் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே ஏன் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நினைக்கிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் பேட்டர்கள் ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்வீப் ஷாட்களை ஆடும்போது முன்னரே நடுவரிடம் சொல்வதில்லை, ஆனால் பந்துவீச்சாளர்கள் மட்டும் ஒவ்வொரு முறை கை மாறும்போது கூட நடுவரிடம் தெரிவிக்க வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இதனைத்தொடர்ந்து முதலில் பந்துவீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கும் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று அஸ்வின் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். உஸ்மான் டரிக் தனது பந்துவீச்சு குறித்து ஏற்கனவே ஐசிசியிடம் இரண்டு முறை அனுமதி பெற்றுள்ளதால், அவர் மீதான புகார்கள் செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.