பெங்களூருவில் உடல்நிலை சரியில்லாத தனது நாய்க்குட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு நபர் ரேபிடோ பைக் புக் செய்துள்ளார். முதலில் நாயைப் பார்த்ததும் பயந்த ரைடர், “இது கடிக்குமா? நீங்கள் கார் புக் செய்திருக்கலாமே” என்று கேட்டுத் தயங்கியுள்ளார். ஆனால், அந்த நாய் குட்டி கடந்த இரண்டு நாட்களாக உணவு ஏதும் உட்கொள்ளாமல் உயிருக்குப் போராடுவதையும், அது யாரையும் கடிக்காது என்பதையும் அதன் உரிமையாளர் விளக்கியுள்ளார். இதைக் கேட்ட அந்த ரைடர், உடனடியாக நாயையும் அதன் உரிமையாளரையும் பைக்கில் ஏற்றிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பார்த்த சமூக வலைதளப் பயனாளர்கள், அந்த பைக் ரைடரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி வருகின்றனர். “ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களே செல்லப் பிராணிகளை ஏற்றத் தயங்கும் நிலையில், இந்த ரைடர் ஒரு ஆம்புலன்ஸ் போலச் செயல்பட்டுள்ளார்” எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளனர். பெங்களூருவில் பெட்-ரைடு (Pet-ride) வசதி தற்போது நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், நாளொன்றுக்கு சுமார் 2000-க்கும் மேற்பட்ட செல்லப் பிராணிகள் இது போன்ற சேவையைப் பயன்படுத்துவதாகத் தரவுகள் கூறுகின்றன.
