பெங்களூருவின் மிகவும் பரபரப்பான ‘சர்ச் ஸ்ட்ரீட்’ பகுதியில், நூற்றுக்கணக்கான மக்கள் நடமாட்டம் இருக்கும் போதே ஒரு நபர் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணும் அவரது தோழியும் நடந்து சென்றபோது, ஒரு நபர் அவர்களைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்துள்ளார். சுமார் 30 நிமிடம் அவர்களைப் பின்தொடர்ந்த அந்த நபர், மக்கள் முன்னிலையிலேயே தனது பேண்டிற்குள் கைவிட்டு அந்தப் பெண்களைப் பார்த்து அநாகரீகமாகச் செயல்பட்டுள்ளார். அந்தப் பெண் தைரியமாக இதை வீடியோ எடுக்கத் தொடங்கிய பிறகும், அந்த நபர் கொஞ்சமும் பயமில்லாமல் அதே அசிங்கமான செயலைத் தொடர்ந்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
”சுற்றிலும் இவ்வளவு பேர் இருந்தும் என்னால் பாதுகாப்பாக உணர முடியவில்லை” என்று அந்தப் பெண் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “இப்படிப்பட்டவர்கள் எதற்கும் பயப்படுவதில்லை, ஏனென்றால் யாரும் நம்மைத் தடுக்க மாட்டார்கள் என்ற தைரியம் அவர்களுக்கு இருக்கிறது” என்று அவர் சிஸ்டத்தின் மீதான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். போலீசார் விசாரணையில், இந்த நபர் இதே பகுதியில் அடிக்கடி இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுபவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். “கண்டு கொள்ளாமல் போங்கள்” என்று பெண்களுக்குச் சொல்லப்படும் அறிவுரைகள்தான் இப்படிப்பட்ட கிரிமினல்களுக்குத் துணிச்சலைத் தருகிறது என நெட்டிசன்கள் ஆவேசமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
