சமூக வலைதளங்களில் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி, இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்ற பெண்ணை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
முகநூலில் போலி கணக்குகளை உருவாக்கி, அதில் கவர்ச்சியான விளம்பரங்கள் மற்றும் வாட்ஸ்அப் எண்களைப் பகிர்ந்து இந்த மோசடி அரங்கேறியுள்ளது. இதனை நம்பி தொடர்பு கொள்ளும் இளைஞர்களிடம் ஆபாச வீடியோ கால், சாட்டிங் மற்றும் நேரில் உல்லாசமாக இருக்க தனித்தனி கட்டணங்கள் வசூலித்து அந்தப் பெண் ஏமாற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின்படி தீவிர விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளியைக் கண்டறிந்து சிறையில் அடைத்தனர்.
வீடியோ காலில் நிர்வாணமாகப் பேச ஒரு தொகை, நேரில் வர ஒரு தொகை என ஆசை காட்டி பலரிடமிருந்து இவர் பணத்தைப் பறித்துள்ளார். இது போன்ற ஆன்லைன் விளம்பரங்களை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்றும், தெரியாத நபர்களிடம் பணத்தைக் கொடுத்து சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
