மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபடத் தமிழ்நாடு மக்கள் துடிப்பதாகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு பாஜகவின் ‘இரட்டை இன்ஜின்’ அரசு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த விமர்சனத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். பிரதமர் குறிப்பிடும் ‘இரட்டை இன்ஜின்’ என்பது உண்மையில் ஒரு ‘டப்பா இன்ஜின்’ என்றும், அது தமிழ்நாட்டில் ஒருபோதும் ஓடாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு பல தடைகளை ஏற்படுத்திய போதும், அதையெல்லாம் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு இன்று இமாலய வளர்ச்சியை அடைந்துள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்றவற்றை விட, பாஜக இல்லாத தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களே வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

“>

 

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை மக்கள் மறக்க மாட்டார்கள் என்றும், டெல்லியின் அதிகாரத்திற்குத் தமிழ்நாடு ஒருபோதும் தலைகுனியாது என்றும் முதல்வர் தனது பதிவில் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.