சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அதிமுக கூட்டணி குறித்துக் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா இருந்தவரை அதிமுக தனித்துவமாகச் செயல்பட்டது, ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ என்று அழைப்பதன் மூலம் அதிமுக பலவீனமடைந்து, பாஜகவின் நிழலில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.
மேலும், 2021 தேர்தலில் தோல்வியடைந்த அதே கூட்டணிதான் மீண்டும் உருவெடுத்திருப்பதாகவும், இது திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியைப் பாதிக்காது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்துப் பேசிய அவர், விஜய்க்குப் பாஜக தரப்பிலிருந்து மறைமுக நெருக்கடிகளும், அச்சுறுத்தல்களும் வருவதாகக் குறிப்பிட்டார்.
விஜய்யைச் சுற்றி இருப்பவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவதாகத் தகவல்கள் வருவதாகவும், இதற்கெல்லாம் பயந்துதான் அவர் பாஜகவையோ மோடியையோ எதிர்க்கத் தயங்குகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் கூறினார்.
விஜய்யின் ‘விசில்’ சின்னம் ஒரு சுயேச்சை சின்னம் தான் என்றும், அதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து விஜய் மௌனம் காப்பது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார். பாஜகவின் தலையீடு இருந்தால் அதை அவர் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றும், பயந்தால் எதிர்கால அரசியல் கேள்விக்குறியாகிவிடும் என்றும் எச்சரித்தார்.
விஜய்யின் கட்சியில் சேரப் பிறர் தயங்குவதையும், தனித்து நின்று வெற்றி பெற்றுவிடலாம் என அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒரு மாயையை உருவாக்கி வருவதையும் விஜய் உணர வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
