ஈரான் போரில் பாகிஸ்தான் வெறும் தூதுவர் மட்டுமே என்றும், இந்தியாவே உண்மையான மத்தியஸ்தர் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி அதிரடியாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பரான இவர், போரின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் பிரதமர் மோடியுடன் நீண்ட நேரம் ஆலோனை நடத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதே நேரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரானுடன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது, சர்வதேச அளவில் இந்தியாவின் ராஜதந்திர வலிமையை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் நம்பிக்கையையும் இந்தியா பெற்றுள்ளதால், அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியாவின் பங்கே முக்கியமானது என்பது கியோசாகியின் கருத்தாகும்.
வளைகுடா நாடுகளில் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் வசிப்பதும், 2026-ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்குவதும் அதன் செல்வாக்கை மேலும் அதிகரித்துள்ளன. இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக ஹார்முஸ் ஜலசந்தியைப் பெரிதும் நம்பியிருப்பதால், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியாவுக்கு நேரடிப் பொருளாதார அக்கறை உள்ளது.
பாகிஸ்தான் வெறும் செய்திகளைப் பரிமாறும் நாடாக மட்டுமே இருக்கும் வேளையில், உலக நாடுகள் இந்தியாவின் செயல்பாடுகளைக் கவனிக்க வேண்டும் என கியோசாகி வலியுறுத்தியுள்ளார். ட்ரம்புடன் இணைந்து புத்தகங்கள் எழுதியுள்ள கியோசாகியின் இந்த கருத்து, சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
