மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் (Prince Sultan) விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதலில் 10 அமெரிக்க வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரானிய ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்த இந்தத் தாக்குதலில், அமெரிக்காவிற்குச் சொந்தமான பல எரிபொருள் நிரப்பும் விமானங்கள் (Refueling Planes) முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதலில் காயமடைந்த வீரர்களில் இருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த மார்ச் 1-ம் தேதி இதே தளத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த பெஞ்சமின் என்ற 26 வயது அமெரிக்க வீரர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் அமெரிக்க ராணுவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ஒரு மாத காலமாக நீடித்து வரும் இந்த மோதலில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், 13 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஈரானின் இந்த அத்துமீறலுக்குப் பதிலடியாக அந்நாட்டின் ராணுவ உள்கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
“வரலாற்றிலேயே ஒரு நாட்டின் ராணுவம் இவ்வளவு விரைவாகச் செயலிழக்கச் செய்யப்பட்டது இதுவே முதல்முறை” எனப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. செயற்கைக்கோள் படங்களில் சிதைந்து கிடக்கும் அமெரிக்க விமானங்களின் காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
