மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் ஒன்றில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான சுவாரசியமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அமைச்சர் கோவிலை ஆய்வு செய்து கொண்டிருந்த சமயத்தில், அங்கிருந்த தம்பதி ஒருவர் தங்களது குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு அமைச்சரிடம் அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதற்கு அமைச்சர் ரமேஷ், “நீங்களே குழந்தைக்குப் நல்ல பேரா பார்த்து வைங்க… நன்றாக வளருங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார். ​அமைச்சர் ரமேஷ் அங்கிருந்து நகர முயன்ற அந்தச் சமயத்தில், கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் கோவில் பிரகாரம் என்று கூட பார்க்காமல் திடீரென தங்களது கட்சித் தலைவரைப் பாராட்டும் விதமாக “அண்ணன் ஜோசப் விஜய் வாழ்க!” என்று உரத்த குரலில் கோஷமிட்டார்.

சொந்தக் கட்சித் தலைவரின் பெயராக இருந்தாலும், கோவில் போன்ற புனிதமான இடத்தில் இப்படி கோஷமிட்டதால் சற்றே டென்ஷனான அமைச்சர் ரமேஷ், “கோவிலுக்குள்ள இப்படி எல்லாம் வச்சுக்காதீங்க!” என்று எச்சரிக்கும் தொனியில் அந்த நபரை நோக்கிக் கூறியுள்ளார். அதோடு நிறுத்தாமல், கோவிலுக்குள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டுமோ அப்படி இருக்க வேண்டும் என்று கறாராகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். தவெக அமைச்சரே தனது சொந்தக் கட்சித் தொண்டரை கோவிலுக்குள் எச்சரித்த இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் வெளியாகி பயங்கர தீயாய் பரவி வருகிறது.