ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி, கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரான் நாடாளுமன்ற நிபுணர்கள் குழு இவரை ஒருமனதாகத் தேர்வு செய்துள்ளது. இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஈரான் ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள், புதிய தலைவர் மொஜ்தபாவுக்குத் தங்களின் முழு விசுவாசத்தை வழங்குவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

ஈரானின் இந்த இக்கட்டான சூழலில் ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா எப்போதும் ஈரானுக்குத் துணையாக நிற்கும் என்றும், தங்களது ஈரானிய நண்பர்களுடனான ஒற்றுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு தொடரும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் வேளையில், ரஷ்யாவின் இந்த வெளிப்படையான ஆதரவு சர்வதேச அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.