ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் போர் பதற்றத்தால் அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் நாடு தழுவிய அவசரநிலையைப் பிரகடம் செய்துள்ளார். தற்போதைய இக்கட்டான சூழ்நிலை குறித்து பிரதமர் ஷெரீப் ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள் வருமாறு, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்கல்வி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே செயல்படும். எரிபொருளைச் சேமிக்கும் பொருட்டு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் ‘ஹைப்ரிட்’ முறையில் அல்லது வீட்டிலிருந்தே (Work from Home) பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு அரசுத் துறைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் 50 சதவீதம் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது பாகிஸ்தானுக்குத் தேவையான கச்சா எண்ணெயை ஈரான் பெருமளவில் வழங்கி வந்தது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் அடிப்படையில் எரிபொருள் வழங்க எந்த நாடும் முன்வராததால், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு விண்ணைத் தொட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. வெறும் 10 நாள் போர் பதற்றத்திலேயே பாகிஸ்தானின் கஜானா காலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊதியத்தைக் குறைக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது. எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், போர் கால அடிப்படையில் பாகிஸ்தான் அரசு மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
