அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், துபாயின் பொருளாதார எதிர்காலம் மற்றும் உலக அரசியலில் அமெரிக்காவின் நிலை குறித்து சீன ஆய்வாளர் ஷுயெசின் ஜியாங் வெளியிட்டுள்ள கணிப்புகள் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

பீஜிங்கைச் சேர்ந்த கல்வியாளரும், சர்வதேச அரசியல் ஆய்வாளருமான ஷுயெசின் ஜியாங், ‘டயலாக் ஒர்க்ஸ்’ (Dialogue Works) என்ற யூடியூப் சேனலில் வழங்கிய பேட்டியில் துபாயின் நிலை குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “துபாய் ஒரு பாதுகாப்பான இடம், அங்கு வரி கிடையாது, முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்ற பிம்பத்தை உருவாக்க அந்நாடு பெருமளவு பணத்தைச் செலவிட்டுள்ளது. ஆனால், தற்போதுள்ள போர் பதற்றம் இந்த பிம்பத்தை ஒரு ‘கானல் நீர்’ போல மாற்றியுள்ளது.

 

ஒரே ஒரு ஏவுகணைத் தாக்குதல் இந்த நம்பிக்கையைச் சிதறடித்துவிடும். அவ்வாறு ஒருமுறை அந்த பிம்பம் உடைந்துவிட்டால், அதை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது. வரும் வாரங்களில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் வெளியேறும் என எதிர்பார்க்கலாம். துபாய்க்கு இனி எதிர்காலம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார். கடந்த 2024-ஆம் ஆண்டு ஷுயெசின் ஜியாங் வழங்கிய விரிவுரை ஒன்றில் கூறிய மூன்று முக்கிய கணிப்புகள் இப்போது உண்மையாகி வருவதால், சமூக வலைதளங்களில் அவரை “சீனாவின் நாஸ்ட்ரடாமஸ்” என்று அழைத்து வருகின்றனர். அவர் கணித்த மூன்று விஷயங்கள்,

நவம்பர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார். அமெரிக்கா, ஈரான் மீது போர் தொடுக்கும். இந்தப் போரில் அமெரிக்கா தோல்வியைச் சந்திக்கும்; இது உலக ஒழுங்கை) நிரந்தரமாக மாற்றும். ஈரானுடனான நேரடிப் போர் வாஷிங்டனுக்கு (அமெரிக்கா) மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று ஜியாங் எச்சரிக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்:

“ஈரான் கடந்த 20 ஆண்டுகளாக இந்தப் போருக்காகத் தன்னைத் தயார்படுத்தி வருகிறது. ஈரானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் உள்நாட்டு எதிர்ப்பு ஆகியவை அந்நியப் படைகளுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும். கடந்த ஜூன் மாதம் நடந்த மோதல்களை வைத்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் திறன்களை ஈரான் ஆழமாக ஆய்வு செய்துள்ளது.

மேலும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்கள் அமெரிக்காவின் வியூகங்களை நன்கு புரிந்து வைத்துள்ளன. அமெரிக்கப் பேரரசைப் பலவீனப்படுத்தவும், இறுதியில் அதை வீழ்த்தவும் அவர்கள் மிகச் சிறந்த திட்டத்தை வைத்துள்ளனர்,” என்று அவர் விரிவாகத் தெரிவித்துள்ளார்.