ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்துக்கு ஈரான் இடையூறு ஏற்படுத்தினால், அந்நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்குவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ள கருத்து, சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் போக்குவரத்தைத் தடுக்க ஈரான் முயற்சித்தால், அமெரிக்கா இதுவரை எந்த நாட்டுக்கும் கொடுக்காத அளவிலான பிரம்மாண்டமான தாக்குதலை நடத்தும். ஈரானின் முக்கியமான இலக்குகளைத் தாக்கி, அந்த நாடு மீண்டும் ஒரு நாடாக உருவெடுக்க முடியாத அளவுக்கு முற்றிலுமாக அழித்துவிடுவேன். ஈரானின் மீது மரணத்தையும், நெருப்பையும், பேரழிவையும் பொழிவோம். ஆனால், இத்தகைய சூழல் ஏற்படக்கூடாது என்பதே எனது பிரார்த்தனை இவ்வாறு டிரம்ப் தனது எச்சரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் போக்கையும் அமெரிக்கா கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்க குடிமக்களை ஆப்கானிஸ்தான் அரசு தவறான முறையில் சிறைபிடித்து வைத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் இதைக் கடுமையாகக் கண்டித்த அமெரிக்கத் தூதர்கள், தலிபான்கள் ‘பிணையக் கைதி’  அரசியலில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது எக்ஸ் தளத்தில் கூறுகையில், “தலிபான்கள் தங்களுக்குச் சாதகமான முடிவுகளைப் பெறுவதற்காகத் தொடர்ந்து பயங்கரவாத உத்திகளைப் பயன்படுத்துகின்றனர். இது எக்காரணம் கொண்டும் பலிக்காது. டெனிஸ் கோயல், மஹ்மூத் ஹபீபி உள்ளிட்ட சட்டவிரோதமாகச் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கக் குடிமக்களையும் தலிபான்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் அமெரிக்கா மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களில் மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.