“ஒரு அமைச்சரா இல்லாம உங்க வீட்டுச் சகோதரனா கேக்குறேன், தயவுசெஞ்சு அந்த ஏழை மக்களுக்காகக் கல்விக்கட்டணத்தைக் கொஞ்சம் குறைச்சுக்கோங்க!” என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மேடையில் வைத்த உருக்கமான வேண்டுகோள் ஒட்டுமொத்தப் பெற்றோர்கள் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் விழாவில் பேசிய அவர், கடந்த காலங்களில் நிலவிய லஞ்ச நெருக்கடிகள், அதிகாரிகள் கொடுத்த குடைச்சல்கள் அனைத்தையும் இந்த புதிய அரசு முற்றிலும் ஒழித்துக்கட்டி விட்டதாக உறுதி அளித்தார்.
இனி ஆன்லைன் மூலம் எவ்வித அலைக்கழிப்பும் இன்றி உங்களுக்குத் தேவையான அனைத்தும் வீடு தேடி வரும் வேளையில், அதற்குப் பிரதியுபகாரமாக நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பத்து பிள்ளைகளும் உங்களது தரமான பள்ளிகளில் பயில வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும் நம் பிள்ளைகள் தான், தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும் நம் வீட்டுப் பிள்ளைகள் தான் என்று குறிப்பிட்ட அமைச்சர், மிடில் கிளாஸ் மக்களுக்காகக் கட்டணத்தைக் குறைப்பீர்களா என்று கேட்டு அரங்கத்தையே உருக வைத்தார்.
