“ஜூலை 1-ஆம் தேதியைக் குறிச்சு வச்சுக்கோங்க, அன்னைல இருந்து ஒரு ரூபா கூட லஞ்சம் இல்லாம எல்லாமே ஆன்லைன்ல மாறிடும் சார்!” என்று சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் இவ்விழாவிற்கு ஓடோடி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் ஒரு புதுப்பித்தல் (Renewal) ஆணைக்கோ அல்லது என்ஓசி (NOC) சான்றிதழுக்கோ தனியார் பள்ளி நிர்வாகிகள் தன்னிடம் வந்து கண்ணீர் வடித்து அழுததை நினைவு கூர்ந்தார்.
அந்த லஞ்சப் பணம் இறுதியில் குழந்தைகளின் கல்விக்கட்டண தலையில்தான் போய் விழுகிறது என்று சாடிய அவர், வரும் ஜூலை 1 முதல் 100 விழுக்காடு மனிதத் தலையீடற்ற, இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இல்லாத ஆன்லைன் முறை கொண்டுவரப்படும் என்றார்.
உள்கட்டமைப்பு மற்றும் ஏபிசிடி (ABCD) எனப்படும் சுகாதார, கட்டிட உறுதி, தீயணைப்பு உள்ளிட்ட சான்றிதழ்களைச் சரியாக வைத்திருந்தால் ஒரே கிளிக்கில் இனி அங்கீகாரம் கிடைக்கும் என்றும், லீக்கேஜ்களை அடைக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடுத்த முழு சுதந்திரமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
