“என்னை ரொம்ப நல்லாத் தெரியும்னு யாராவது உங்ககிட்ட வந்து சொன்னா, முதல்ல அவங்களை ‘கெட் அவுட்’னு சொல்லி வெளியே விரட்டுங்க!” என்று சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் அதிரடியாக எச்சரித்துள்ளது இடைத்தரகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடுமையான உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல் இவ்விழாவிற்கு ஓடோடி வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கடந்த காலங்களில் ஒரு புதுப்பித்தல் (Renewal) ஆணைக்கோ அல்லது என்ஓசி (NOC) சான்றிதழுக்கோ தனியார் பள்ளி நிர்வாகிகள் தன்னிடம் வந்து லஞ்ச நெருக்கடியால் கண்ணீர் வடித்து அழுததை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தார்.
அப்படி வாங்கப்படும் லஞ்சப் பணம் இறுதியில் அப்பாவிப் பிள்ளைகளின் கல்விக்கட்டண தலையில்தான் போய் விழுகிறது என்று சாடிய அவர், வரும் ஜூலை 1 முதல் 100 விழுக்காடு மனிதத் தலையீடற்ற, இடைத்தரகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இல்லாத புதிய ஆன்லைன் முறை கொண்டுவரப்படும் என்றார்.
உள்கட்டமைப்பு மற்றும் ஏபிசிடி (ABCD) எனப்படும் சுகாதார, கட்டிட உறுதி, தீயணைப்பு உள்ளிட்ட சான்றிதழ்களைச் சரியாக வைத்திருந்தால் ஒரே கிளிக்கில் இனி அங்கீகாரம் கிடைக்கும் என்றும், துறையிலுள்ள லீக்கேஜ்களை முற்றிலும் அடைக்க முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தனக்குக் கொடுத்த முழு சுதந்திரமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
“யாராவது எனக்கு Minister-ஐ ரொம்ப நல்லாத் தெரியும்னு சொன்னால், நம்பாதீங்க… அவரை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அர்த்தம்.. ‘வெளியே போ’ன்னு சொல்லுங்க”- அமைச்சர் ராஜ்மோகன்#Rajmohan | #CMVijay | #TVK pic.twitter.com/bw9BF20J0h
— PttvOnlinenews (@PttvNewsX) June 17, 2026
“>
