திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி சிப்காட் பகுதியில், வடமாநிலத் தொழிலாளியின் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டவர்களைப் பிணையில் வர முடியாதபடி சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும், அப்போதுதான் இது போன்ற எண்ணம் கொண்டவர்களுக்கு அது பாடமாக அமையும் என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர குற்றங்களைத் தடுக்க ஒரு புதிய மற்றும் விசித்திரமான தீர்வையும் அவர் முன்வைத்துள்ளார். கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சி மற்றும் மும்பையில் உள்ள கிராண்ட் ரோடு போன்ற பகுதிகளில் அந்தந்த மாநில அரசுகளின் அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகவும், அதன் காரணமாக அந்த மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே பாணியில், தமிழ்நாட்டின் முக்கிய மாநகரங்களிலும் அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை முழுமையாகக் குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்றும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக அவர் வலியுறுத்தியுள்ளார்.