தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் தனது பதவியேற்பு விழா மேடையில் பேசும்போது, ‘தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியைக் கடந்திருப்பதாகவும், மாநிலத்தின் நிதி நிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்’ என்றும் அறிவித்திருந்தார். அதன்படி, தவெக அரசு பொறுப்பேற்று 36 நாள்களே நிறைவடைந்துள்ள நிலையில், நேற்று மாலை நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் மொத்தக் கடன் ரூ.10 லட்சம் கோடியாக இருக்கும் என்றே பொதுமக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று வெளியான வெள்ளை அறிக்கை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், மாநிலத்தின் மொத்தக் கடன் அளவு ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்து நிற்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசு வாங்கிய மொத்தக் கடன் ரூ.5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த 5 கால திமுக ஆட்சியில் மட்டும் கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது வெள்ளை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடியிலிருந்து ரூ.78,324 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம், இன்று பிறக்கும் குழந்தை உள்பட தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 934 கடன் சுமை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தக் கடன்களுக்காக, கடந்த நிதியாண்டில் (2025-26) மட்டும் வட்டிக்கான செலவு ரூ.67,050 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, அரசு தினந்தோறும் ரூ.184 கோடியை வட்டி செலுத்த மட்டுமே ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மாநிலத்தின் மொத்தக் கடன் அளவு, மாநில உற்பத்தி மதிப்பில் 28.3 சதவீதமாக உள்ளது. இது நிதி நிலைமை அபாயக் கட்டத்தில் இருப்பதை உணர்த்துகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடனுக்கான வட்டி போன்ற கட்டாயச் செலவினங்கள் மட்டுமே 64.4 சதவீதமாக உள்ளது. அதாவது, அரசுக்குக் கிடைக்கும் ரூ.100 வருவாயில், ரூ.64.40 இந்த அத்தியாவசியச் செலவுகளுக்கே சென்றுவிடுகிறது.
மீதமுள்ள ரூ.35.60 தொகையைக் கொண்டுதான் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகளையும் கவனிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. தமிழக துறைகளிலேயே அதிகபட்சமாகக் கடனில் தத்தளிப்பது மின் துறைதான் என்பது உறுதியாகியுள்ளது. மின் துறையின் கடன் மட்டும் ரூ.2.47 லட்சம் கோடியாக உள்ளது. மாநில அரசின் மொத்த உத்தரவாதக் கடனில் 79 சதவீதம் மின் துறைக்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, போக்குவரத்துத் துறையும் ரூ.72,667 கோடி இழப்பைச் சந்தித்து வருகிறது.
அதேவேளையில், தவெக அரசு பொறுப்பேற்றவுடன் டாஸ்மாக் நிறுவனத்தில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்க வேண்டிய சூழல் நீடிப்பதால், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியைத் தொடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. “கடன் எனும் கடலில் தமிழகம் எனும் கப்பல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அரசின் 55 துறைகளும் கப்பலில் உள்ள 55 துளைகளைப் போன்றவை. இவற்றின் வழியாகக் கடன் நீர் உள்ளே புகுந்து கொண்டிருக்கிறது.
இந்தத் துளைகளை அடைத்து, நிதி மேலாண்மையைச் சீரமைத்தால் மட்டுமே கப்பல் கரைசேரும்.” எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, அனைத்துத் துறைகளிலும் உள்ள வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி, சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். குறுகிய காலத்தில் நிதி நிலையைச் சீராக்க முடியாது என்பதால், அரசு தனது தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றைச் குறிப்பிட்ட காலம் தள்ளிவைத்துவிட்டு, நிதி மேலாண்மையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
