“கூட்டணி தர்மத்துக்காக நாங்க இவ்வளவு நாள் பொறுமையா இருந்தா, எங்க பெருந்தலைவர் காமராஜரையே இப்படித் தரக்குறைவா பேசுவீங்களா ?” என்று கோவை மாநகராட்சி கூட்டத்தில் திமுக – காங்கிரஸ் கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு மற்றும் பயங்கர மோதல் வெடித்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்திற்கு அருகில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை வைக்க வேண்டும் என திமுகவினரும், கல்விக்கண் திறந்த காமராஜரின் படத்தை வைக்க வேண்டும் என காங்கிரஸ் தரப்பும் மேயர் இருக்கையை முற்றுகையிட்டுப் போர்க்கொடி தூக்கினர்.
ஒருகட்டத்தில் இரு தரப்பினரும் “திமுக ஒழிக”, “காங்கிரஸ் ஒழிக” என ஆக்ரோஷமாக முழக்கமிட்டு மோதிக் கொண்டதோடு, திமுக உறுப்பினர்கள் சிலர் சுத்தியல் மற்றும் ஆணிகளுடன் மாமன்றச் சுவரில் படம் மாட்ட முற்பட்டதால் அவையே ரணகளமானது.
இதனிடையே அதிமுக கவுன்சிலர்கள் கருப்புச் சட்டை அணிந்து மாநகராட்சியை கலைக்கக் கோரி முழக்கமிட்டதால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது; இறுதியில், மாநகராட்சி ஆணையர் தலையிட்டு அரசாணைப்படி அடுத்த கூட்டத்தில் படங்களை வைக்கலாம் என சமாதானம் செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸார் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
