உத்தரப் பிரதேசம் பரெய்லி மாவட்டத்தில் உள்ள ஜாகி நவாதா பகுதியில், இஸ்ராயில் என்ற நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபரின் தாயும் குடும்பத்தினரும் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அவரது மனைவி கௌசியா மற்றும் அதே வீட்டின் உரிமையாளர் சலீம் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அதாவது உயிரிழந்தவரின் மனைவிக்கும் வீட்டு உரிமையாளரான சலீமுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் உல்லாசமாக இருக்கும் போது இஸ்ராயில் நேரில் பார்த்துவிட்டதால் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
கள்ளத்தொடர்பைத் தட்டிக்கேட்ட கணவனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் குடும்பத்தினர் கண்ணீருடன் குற்றம்சாட்டியுள்ளனர். மனைவியின் அத்துமீறல்களாலும் தொடர் சண்டைகளாலும் மனமுடைந்த இஸ்ராயில், பலமுறை குடும்பத்தினரிடம் தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தச் சூழலில், அவரை வலுக்கட்டாயமாக ஆசிட் குடிக்க வைத்துக்கொலை செய்துவிட்டதாகக் கூறி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறப்பதற்கு முன்பு, இஸ்ராயில் காவல்துறையினரிடம் தன் மனைவி மற்றும் சலீமின் சதித்திட்டம் குறித்து வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் குடும்பத்தினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய நகர காவல் கண்காணிப்பாளர் மானுஷ் பாரிக், உடலை உடனடியாகக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் அமிலத்தைக் குடித்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் இறந்தாரா என்ற உண்மை முழுமையாகத் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரின் தீவிரப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அந்தச் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
