மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் மாவட்டம், ராஞ்சிபகுதியில், பெற்ற தாயான 75 வயது மூதாட்டியைக் கொடூரமாகத் தாக்கியுள்ள மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜு விஸ்வகர்மா என்ற அந்த நபர் எப்போது மது அருந்திவிட்டு வந்து தனது வயதான தாயை அடிப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்தச் சூழலில், வழக்கம்போல போதையில் தாயைத் தாக்கியதோடு, அவர் உயிர் பயத்தில் அலறி அடித்து வெளியே ஓடியபோதும் விடாமல் நடுரோட்டில் வைத்து இழுத்துச் சென்று தலைமுடியைப் பிடித்துப் பிய்த்துத் தாக்கியுள்ளார். இந்தத் திடுக்கிடும் அச்சுறுத்தும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பொதுமக்கள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினர்.
சாலையில் மக்கள் கண்முன்னே இந்த வெறிச்செயல் அரங்கேறியபோதும் சிலர் வேடிக்கை பார்த்துள்ளனர், மேலும் காப்பாற்றச் சென்ற அக்கம் பக்கத்தினருக்கும் அந்த நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். ஏற்கனவே அந்த நபர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். வயதான காலத்தில் ஆதரவாக இருக்க வேண்டிய மகனே எமன்போல மாறித் தாயைக் கொடுமைப்படுத்திய இந்தச் சம்பவம், மனிதநேயம் செத்துவிட்டதா என்ற மிகப்பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.
இதற்கிடையே, சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் சிசிடிவி வீடியோவைக் கைப்பற்றிய போலீசார் விசாரணையைத் தொடங்கினார். வயதான தாயை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய ராஜு விஸ்வகர்மா மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை விரைவில் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் காவல் துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
