கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றி வரும் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பான வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் முடிந்து நான்கே மாதங்கள் ஆன நிலையில், தங்களுக்குள் தாம்பத்திய உறவு முழுமையடையவில்லை என்பதைக் காரணம்காட்டி பெண் காவல் அதிகாரி ஒருவர் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கணவர் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது, வெறும் தாம்பத்திய உறவு முழுமையடையவில்லை என்பதைக் காரணம் காட்டி, அதனை ஒருபோதும் கிரிமினல் குற்றமாகவோ அல்லது வரதட்சணை கொடுமையாகவோ பார்க்க முடியாது என்று வாதாடப்பட்டது. மறுபுறம் மனைவி தரப்பில், தனது கணவர் தன்னை  நண்பராக மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புவதாகவும், அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் விரிவாக விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் குற்றவியல் சட்டங்களை தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சுட்டிக்காட்டியது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குறுகிய கால திருமண வாழ்வில் தாம்பத்திய உறவு முழுமையடையவில்லை என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் மட்டுமே ஒட்டுமொத்த கிரிமினல் வழக்கும் கட்டமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திருமண வாழ்வில் ஏற்படும் பொருந்தாமை, கருத்து வேறுபாடுகள் அல்லது தாம்பத்திய உறவு முழுமையடையாமை போன்ற தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்சினைகளை ஒருபோதும் ‘கொடுமை’ வழக்குகளாக மாற்றுவதற்கு குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை முறைச் சிக்கல்களுக்கு கிரிமினல் சட்டங்களை ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தத் தீர்ப்பு  அமைந்துள்ளது.