பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம்,  கீர்த்தனியா பஞ்சாயத்தில் உள்ள முக்கிய சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் படுமட்டமான குழிகளுடன் காட்சி அளிக்கிறது. தேசிய நெடுஞ்சாலையுடன் இணையும் இந்தச் சாலையில் வாகனங்கள் செல்ல வேண்டிய இடத்தில், மழைநீர் தேங்கி குளம் போல் மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் இந்தச் சாலையில் பயணிக்க முடியாமல் திணறி வந்த நிலையில், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு நூதனப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மோசமான சாலையைக் கண்டித்து வெறும் வார்த்தைகளில் கோஷம் போடாமல், அந்தப் பாதையையே கிராம மக்கள் ஒரு நெல் வயலாக மாற்றிக் காட்டினர். ஜள்ளிக்கற்களும் சேறும் சகதியுமாகக் கிடந்த நடுரோட்டில் இறங்கிய மக்கள், தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக அங்கு நெல் நடவு செய்து, உரம் தெளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் பம்பம் சிங் மற்றும் சுலோசனா தேவி, பிரமிலா தேவி உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் ஒன்று திரண்டு நடத்திய இந்த விநோதப் போராட்டம் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் இந்தச் சாலையைச் சீரமைக்கவில்லை என்றால், இந்த நெல் நடும் போராட்டம் நாளை இன்னும் கடுமையான மிகப்பெரிய  போராட்டமாக வெடிக்கும் என்று கிராம மக்கள் அரசுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் இந்த நூதனமான போராட்டம் தொடர்பான தகவல்களும் காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.