சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகள் மூலம் உருவாகும் அறிமுகங்கள், சில சமயங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பேராபத்தாக மாறுவதற்கு இந்தச் சம்பவமே சாட்சி.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு, சமூக வலைத்தளம் வாயிலாக தானேவைச் சேர்ந்த ஒரு வசதியான குடும்பத்து இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாட்கள் செல்லச் செல்ல இந்த நட்பு அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தவே, அச்சிறுமியை நேரில் பார்க்க விரும்புவதாக அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதற்காக தானேவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் நாக்பூருக்கு பறந்து வந்த அந்த இளைஞர், அங்குள்ள ஒரு பிரபல லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். தான் தங்கியிருந்த லாட்ஜ் அறைக்கு அந்தச் சிறுமியை வரவழைத்த இளைஞர், கதவை உட்புறமாக பூட்டிவிட்டு தனது உண்மையான கொடூர முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார்.

சிறுமியை அந்த அறையிலேயே சிறைபிடித்து, சுமார் 30 மணி நேரத்திற்கும் மேலாக வெளியில் செல்ல விடாமல் அடைத்து வைத்து கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளார். சிறுமி எவ்வளவோ கதறி அழுதும், தப்பிச் செல்ல முயன்றும் எதையும் பொருட்படுத்தாத அந்த மிருகம், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து அச்சிறுமியின் உடலின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட முறை கொடூரமாகக் குத்தியுள்ளது.

30 மணி நேர நரக வேதனைக்குப் பிறகு, சிறுமி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழவே, அவர் இறந்துவிட்டதாகக் கருதிய அந்த இளைஞர் அறையைப் பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். பின்னர் தகவலறிந்து வந்த காவல்துறையினர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அச்சிறுமி உயிருக்குப் போராடி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அந்தப் பணக்கார வீட்டு இளைஞரைப் பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஆன்லைன் நட்பை நம்பிச் செல்லும் சிறுமிகள் மற்றும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை மணியாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.