பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு, சிந்து நதி நீர் ஒரு சொட்டு கூட கிடைக்காமல் செய்ய இந்தியா தயங்காது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காட்டமாக எச்சரித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் பேசிய அவர், இந்திய மக்களின் கண்ணீருக்குக் காரணமானவர்கள் எங்களிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.

“இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பயணிக்க முடியாது” என்று பிரதமர் மோடி முன்பு கூறியதை நினைவுகூர்ந்த அவர், அமைதி மற்றும் நல்லிணக்க மொழியைப் புரிந்துகொள்ளாத எதிரிகளுக்கு, தகுந்த பதிலடி கொடுப்பதில் இந்தியா உறுதியாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

பழைய ஒப்பந்தங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக மட்டும் தொடர முடியாது என்பதை இந்தியா உலகிற்கு உணர்த்திவிட்டதாக அவர் கூறினார். கடந்த ஆண்டு பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆபரேஷன் சிந்துர் மூலம் இந்திய ராணுவம் தனது வலிமையை உலகுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தியாவிடம் தடுப்பூசி ஆற்றல் மட்டுமல்ல, எதிரிகளை நடுங்க வைக்கும் ஆயுத ஆற்றலும் உள்ளது என்பதை உலகம் தற்போது உணர்ந்துள்ளதாக அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.