அடுத்த இரண்டு மாதங்களில் தொலைக்காட்சி பெட்டிகள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களின் விலைகள் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக மைக்ரோசிப்களின் கடும் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும் கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, மைக்ரோசிப்களின் விலை வரும் மார்ச் மாதத்திற்குள் சுமார் 120 சதவீதம் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு எஐ பயன்பாடு அதிகரிப்பதும் இந்த விலை உயர்விற்கு ஒரு கூடுதல் காரணியாக அமைந்துள்ளது.
இந்த விலை உயர்வு ஏற்கனவே சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பல நிறுவனங்கள் தற்போது வழங்கி வரும் தள்ளுபடிகள் மற்றும் ‘கேஷ்பேக்’ சலுகைகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் செல்போன்களின் விலை அதிகரிப்பால் அவற்றின் விற்பனை 10 முதல் 12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர். இதனால் புதிய மின்னணு சாதனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ள நுகர்வோர், விலை மேலும் உயரும் முன்பே தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
