கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில், காதல் திருமணம் செய்து கொண்ட  பின்னர் விவாகரத்து செய்யாமலே வேறொரு பெண்ணுடன் வாழ்ந்தது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பண்ருட்டியைச் சேர்ந்த லோகனாதன் என்பவருக்கும், பட்டதாரி பெண்ணான கலைச்செல்விக்கும், கடந்த 2016-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் 43 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட வரதட்சணை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திருமணத்துக்குப் பிறகு, கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், லோகனாதன் தன்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு பலமுறை வேதனைபடுத்தியதாக கலைச்செல்வி, பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் தற்போது வரை விசாரணை நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், லோகனாதன் தன்னை விவாகரத்து செய்யாமலே, வேறொரு பெண்ணுடன் பண்ருட்டி பகுதியில் வசித்து வருவதாக தகவல் கிடைத்ததும், கலைச்செல்வி அவருடைய வீட்டை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அங்கு லோகனாதனும், அவரது காதலியும் இருப்பதை கண்டதும், அதிர்ச்சியடைந்த கலைச்செல்வி, இருவரையும் வீட்டிற்குள் பூட்டி வைத்து கூச்சலிட்டதாக தெரிகிறது. “விவாகரத்து இல்லாமல் வேறு பெண்ணுடன் எப்படி வாழ்கிறீர்கள்?” என்று வாதாடிய நிலையில், லோகனாதனுடன் இருந்த பெண்ணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வியை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். மேலும், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.