திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே தேசூர் பகுதியில், பணம் கொடுக்கல் வாங்கல் காரணமாக நண்பரை கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.  தேசூர் நகரைச் சேர்ந்த ஷேக் அகமதின் மகன் ஷேக் ரகுமான் (வயது 26) ஒரு சிக்கன் கடையில் பணியாற்றி வருகிறார்.

கடந்த வாரம், பஜார் வீதியில் உள்ள பேக்கரியில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியபோது, முன்விரோதம் காரணமாக துரைமுருகன் (24), ராம்குமார் (22), சந்தோஷ் (28) ஆகியோர் வழிமறித்து தாக்கினர். இந்த மூவரும் முறையே மீன் கடை உரிமையாளர் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றனர்.

துரைமுருகன் மறைத்து வைத்திருந்த மீன்வெட்டும் கத்தியை கொண்டு, ஷேக் ரகுமானை கழுத்தில் வெட்டி கொலை செய்ய முயன்றபோது, அவர் தலையை திருப்பியதால் இடது காதே துண்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினர்.

இந்த தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி ஓடினர். அதே நேரம் ரத்த வெள்ளத்தில் தவித்த ஷேக் ரகுமானை அருகிலிருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்குச் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக ஷேக் ரகுமானின் புகாரின் பேரில், தேசூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை சில மணிநேரங்களில் கைது செய்தார். பின்னர் துரைமுருகன், ராம்குமார், சந்தோஷ் ஆகிய மூவரும் வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தேசூர் பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.