மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட மணக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (70) மற்றும் அவரது மனைவி மல்லிகா (65). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இரண்டாவது மகன் ராஜிலு வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில்  பெற்றோரின் பராமரிப்பு, செலவுகளை யார் மேற்கொள்வது என்பது தொடர்பாக மகன்கள் இடையே அடிக்கடி பிரச்சனைகள் எழுந்துள்ளன. இதற்கிடையில், வயது முதிர்வு காரணமாக இந்த தம்பதியினர் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

குடும்பப் பிரச்சனையுடன் உடல்நலக் குறைவும் மேலோங்கியதால், மனஅழுத்தத்திற்கு உள்ளாகிய தம்பதியினர், வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வழக்கமாக காலை நேரத்தில் அறையை விட்டு வெளியே வரக்கூடிய அவர்கள், நீண்ட நேரமாகியும் வெளியே வராததைப் பார்த்த உறவினர்கள், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர்.

இந்த தகவல் உடனடியாக செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகவே தம்பதியினர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்தவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.