தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மின்னஞ்சலில், இன்னும் சற்று நேரத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ளதால், இந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

​மிரட்டல் வந்ததையடுத்து, உடனடியாகப் பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியர் அலுவலகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், புதுக்கோட்டையில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழல் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.