பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், முக்கிய கனிமங்களின் மறுசுழற்சி திட்டத்திற்கு ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டம், மின்னணு கழிவுகள், லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் பிற தொழில்துறை கழிவுகளிலிருந்து முக்கிய கனிமங்களை பிரித்தெடுக்கவும், தயாரிக்கவும் உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சுரங்கத்துறை இதனைத் தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம், மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ள ரூ.34,000 கோடி மதிப்பிலான தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் மூலம், பசுமை எரிசக்திக்கான பயன்பாட்டை விரைவுபடுத்துவது, மற்றும் இந்தியாவை கனிமங்களில் தற்சார்பு நிலைக்கு கொண்டு செல்லவே முக்கிய இலக்குகளாக உள்ளன. தாமிரம், லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் அரிய வகை புவி கனிமங்கள் போன்றவை இந்த முயற்சிக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களாகும்.
மேலும், கனிம அகழாய்வை மேம்படுத்துதல், வெளிநாடுகளில் உள்ள கனிம வளங்களை பெற்றுக் கொள்வது, தொழில்நுட்ப முன்னேற்றம் மூலம் மறுசுழற்சி திறனை வளர்த்தல் மற்றும் கனிம இறக்குமதியை குறைத்தல் ஆகியவை இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்களாக மந்திரிசபை கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
