அசாமில் இருந்து வந்த ஒரு அபூர்வமான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. அசாமின் போர்பக்ரா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவன் யுவராஜ் ரபா, தினமும் தனது பள்ளிக்கு குதிரை மீது சவாரி செய்கிறார். மேற்கு காசி மலையை ஒட்டியுள்ள டக்ஷின் பன்டன் பழங்குடி நடுநிலை பள்ளிக்கு செல்லும் இச்சிறுவன், மற்ற குழந்தைகள் போன்று சைக்கிளோ, நடக்கவோ இல்லாமல் குதிரையை நம்பி பள்ளிக்குச் செல்கிறார். கிராம மக்கள் அவரது முயற்சியை பாராட்டியும், மாணவனின் நேர்த்தியும் ஒழுக்கமும் ஆசிரியர்களால் புகழப்பட்டு வருகின்றது.

 

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், பலரும் சிறுவனின் உற்சாக முயற்சியை பாராட்டி, “அருவிக்குள்ள கடல் இருக்குற மாதிரி! இந்தக் குழந்தையின் விடாமுயற்சி தான் கல்விக்காக கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு!” எனக் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு கிராமப்புறக் கல்வியின் சிக்கல்களை விளக்கும் வகையில் இருக்கிறது.

இதற்கு முன் கடந்த மாதமும், மெகாலயா மாநிலத்தில் உள்ள மேற்கு காசி மலை பகுதியில் ஒரு சிறுவன் குதிரை மீது பள்ளிக்குச் செல்லும் வீடியோ வைரலானது. பழங்குடி கிராம வாழ்க்கையை நேரடியாக காட்டும் அந்த வீடியோவில், சிறுவன் புயல்போல் குதிரையை ஓட்டும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. நாகலாந்து சுற்றுலா துறை அமைச்சர் டெம்ஜென் இம்னா அலாங் கூட இந்த வீடியோவை X-ல் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.