புது டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். இதில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்களை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என இரண்டு அடுக்குகளாக குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சீர்திருத்தம் வரும் 22-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய மாற்றத்தின் படி, பதப்படுத்தப்பட்ட உணவுகள், உலர் பழங்கள், ஜாம்கள், நெய், வெண்ணெய், ஊறுகாய், சட்னிகள், டிராக்டர்கள், ஏ.சி., குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்ட 175 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படுகிறது. 12 சதவீத வரியில் இருந்த பல பொருட்கள் தற்போது 5 சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சீரான விலைக்கடியில் இப்பொருட்களை வாங்கும் வசதி ஏற்படும்.

மேலும், 20 லிட்டர் குடிநீர், காற்று செலுத்தப்படாத பானங்கள், தின்பண்டங்கள், காலணிகள், ஆடைகள், மருந்துகள், மருத்துவ கருவிகள் ஆகியவை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது. பென்சில், சைக்கிள், குடை, ஹேர்பின் ஆகியவையும் 5 சதவீதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. சில வகை டெலிவிஷன், பிரிஜ், வாஷிங் மெஷின் ஆகியவைகள் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி.க்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவை அனைத்திற்கும் விலை குறைவாகும்.

மின்சார வாகனங்களுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தாலும், மத்திய அரசு அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிக்க 5 சதவீத ஜி.எஸ்.டி.தான் தொடரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும், புகையிலை, பான் மசாலா, சிகரெட் போன்றவைக்கு 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை கார்கள் 18 சதவீத ஜி.எஸ்.டி. விகிதத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனால், எஸ்.யு.வி., சொகுசு கார்கள் மீது 40 சதவீத சிறப்பு வரி தொடர்கிறது.

இதற்கிடையே, எழுத்துப் பொருட்கள், புத்தகங்கள், மேப்புகள், கிரையான்ஸ் போன்ற கல்வி தொடர்பான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனிநபர் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு மீதும் ஜி.எஸ்.டி. விலக்கு வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், “ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மக்களுக்கு நேரடி நிவாரணம் அளிக்கும். வரி கட்டமைப்பை எளிமைப்படுத்தி வணிக சுழற்சியை ஊக்குவிக்கிறது. இது முக்கியமான முன்னேற்றம்” என தெரிவித்துள்ளார்.