நம்பர் பிளேட் சரியில்லை மற்றும் ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி சாமானிய நபர் ஒருவருக்கு ரூபாய் 6,000 அபராதம் விதித்த போலீஸ் அதிகாரி ஒருவரே, சற்று நேரத்தில் ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டி ஒருவருக்கு கடுமையான அபராத ரசீதை வழங்கியுள்ளனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த அபராதத்தை விதித்த அதே போலீஸ் அதிகாரி, ஹெல்மெட் அணியாமல் வண்டியில் சென்றுள்ளார்.

​இதைப்பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர், அந்த அதிகாரியை நடுரோட்டில் தைரியமாக மடக்கிப் பிடித்து, “எங்களுக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா?” எனக் கேள்வி எழுப்பியதோடு, அதைத் தனது மொபைல் போவிலும் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் அதிகாரி, அந்த இளைஞரின் மொபைல் போனை வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயன்றுள்ளார். பின்னர் அந்த வாலிபர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதும், “அவசரத்தில் ஹெல்மெட் எடுக்க மறந்துவிட்டேன்” என மழுப்பலாகப் பதிலளித்துள்ளார். சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே இப்படி விதிமுறைகளை மீறிவிட்டு, தட்டிக்கேட்ட தனி ஒரு இளைஞரை மிரட்ட முயன்ற இந்த வீடியோ இணையத்தில் கடுமையான கண்டனங்களை குவித்து வருகிறது.