திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும், ராகுல் காந்தி மற்றும் விசிக-வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதற்கும் தமிழக அமைச்சரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராஜேஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு திமுக மட்டுமே மேலாதிக்க மனோபாவத்துடன் பேசுவது ஏற்புடையதல்ல என்றும், காங்கிரஸின் வாக்கு வங்கியும் திமுகவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளாக தேர்தல் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராமல் திமுக ஏமாற்றி வந்ததாகவும், இந்த நியாயமற்ற அணுகுமுறையைத்தான் தமிழக மக்கள் தவெக மூலம் மாற்றிக் காட்டியுள்ளனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் அறிவித்த ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்ற ஜனநாயகக் கொள்கையை ஏற்றுக்கொண்டுதான், திமுக கூட்டணியில் நீண்டகாலமாகப் புழுக்கத்தில் இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தற்போது தவெக ஆட்சியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளதாக ராஜேஷ் குமார் விளக்கியுள்ளார்.
1967 முதல் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி இல்லாமல் தனித்து வென்றதில்லை என்ற வரலாற்றை நினைவூட்டிய அவர், நேற்று வரை கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்பு மீறி இழிவாக விமர்சிப்பதை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இதே நிலை நீடித்தால் திமுக கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
