மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரத்தில் மனிதநேயத்தை போற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆதரவற்ற நிலையில் இருந்த 70 வயது மூதாட்டி ஒருவரை, ஜிதேந்திர குமார் என்ற சுமைதூக்கும் தொழிலாளி தனது கை வண்டியில் வைத்து 3 கிலோமீட்டர் தூரம் தள்ளிக்கொண்டு ஆதார் மையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
அந்த மூதாட்டிக்கு கால்கள் செயலிழந்த நிலையில், அவரை அழைத்து வர ஆட்டோ ஓட்டுநர்கள் 200 முதல் 500 ரூபாய் வரை கேட்டதால், வசதி இல்லாத ஜிதேந்திரா தனது கை வண்டியையே வாகனமாக மாற்றிக்கொண்டார்.
கடந்த ஒரு ஆண்டாக ஆதார் அட்டை புதுப்பிக்கப்படாததால் அந்த மூதாட்டிக்கு ரேஷன் பொருட்கள் மற்றும் ஓய்வூதியம் கிடைப்பதில் பெரும் சிக்கல் இருந்துள்ளது. தனது அன்றாட பிழைப்புக்காகச் சுமை தூக்கும் வேலை செய்யும் ஜிதேந்திரா, அந்தப் பாட்டியின் கஷ்டத்தைப் பொறுக்க முடியாமல் இந்த உதவியைச் செய்துள்ளார்.
ஆதார் மையத்தில் வேலை முடிந்ததும் மீண்டும் அவரை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்த உதவியால் நெகிழ்ந்து போன அந்த மூதாட்டி, கைகூப்பி தனது நன்றியைத் தெரிவித்தார்.
