அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், சமையல் கலைஞர் ஒருவர் கொதிக்கும் எண்ணெய்க்குள் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது  ‘ஆலிவ் கார்டன்’ (Olive Garden) என்ற உணவகத்தில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு சமையல் கலைஞராகப் பணியாற்றி வந்த நபர், திடீரென தனது ஆடைகளைக் களைந்துவிட்டு, அங்கிருந்த பெரிய அளவிலான ‘டீப் பிரையர்’ (Deep Fryer) எனப்படும் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் தலைகுப்புறக் குதித்துள்ளார்.

சம்பவம் நடந்த போது அங்கிருந்த சக ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இதைப் பார்த்து அலறியுள்ளனர். உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறை, இது ஒரு தற்கொலை முயற்சி என்பதை உறுதிப்படுத்தியது. உயிரிழந்தவரின் குடும்பத்தினரின் தனியுரிமையைக் கருதி அவரது பெயர் விவரங்களை வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது. இந்த தற்கொலை முயற்சியின் போது, அந்த நபரைத் தடுக்க முயன்ற சக பெண் ஊழியர் ஒருவருக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. மேலும், அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சிலர் அவரைத் தடுக்கப் போராடியும் பலனின்றிப் போனது.

சம்பவம் நடந்த சமயத்தில் அவசரக்கால அழைப்பு மையத்திற்கு (911) வந்த அழைப்புகளில், “அங்கே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.. மக்கள் அலறிக் கொண்டிருக்கிறார்கள்.. ஒருவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது” என்ற பதற்றமான குரல்கள் பதிவாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த உணவகம் சில நாட்களுக்கு மூடப்பட்டது. “தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக எங்களால் இது குறித்து விரிவான கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது” என அந்த உணவக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மன அழுத்தம் காரணமாக இத்தகைய விபரீத முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.