அழகை மேம்படுத்திக் கொள்ளும் ஆசையில் மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளன. அமெரிக்காவில் தற்போது சடலங்களிலிருந்து பெறப்படும் கொழுப்பைக் கொண்டு உடலமைப்பை மாற்றியமைக்கும் புதிய அழகுசாதன சிகிச்சை முறை (Cosmetic Procedure) அறிமுகமாகி, பெரும் மருத்துவ மற்றும் நெறிமுறை ரீதியான விவாதங்களைத் தூண்டியுள்ளது.
‘டைகர் எஸ்தெடிக்ஸ்’ (Tiger Aesthetics) என்ற நிறுவனம், ‘AlloClae’ என்ற பெயரில் இந்தத் தயாரிப்பைச் சந்தைப்படுத்துகிறது. மருத்துவப் பயன்பாட்டிற்காகத் தானமாகப் பெறப்பட்ட மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கொழுப்புத் திசுக்கள், பதப்படுத்தப்பட்டு ஊசி மூலம் செலுத்தப்படும் ‘ஃபில்லர்’களாக (Fillers) மாற்றப்படுகின்றன.
பொதுவாக ‘பிரேசிலிய பட் லிஃப்ட்’ (BBL) போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு நோயாளியின் உடலில் போதிய கொழுப்பு இல்லாத பட்சத்தில், இந்த ‘சடலக் கொழுப்பு’ ஒரு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
நியூயார்க்கைச் சேர்ந்த 34 வயது நிதி நிபுணர் ஒருவர், தனது இடுப்புப் பகுதியை மெருகேற்ற இந்த முறையில் சுமார் ₹40 லட்சம் ($50,000) செலவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது “நெறிமுறைப்படியே பெறப்பட்டது” என்றும், மருத்துவத் துறையில் திசு தானம் என்பது சாதாரணமானதுதான் என்றும் அவர் தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளார்.
மருத்துவர்களின் கூற்றுப்படி இந்த செயல்முறை பின்வருமாறு அமைகிறது. அதாவது பதிவு செய்யப்பட்ட உறுப்பு தானம் செய்பவர்களிடமிருந்து கொழுப்பு எடுக்கப்படுகிறது. பின்னர் அதிலுள்ள டிஎன்ஏ (DNA) மற்றும் உயிருள்ள செல்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன. இதனால் பெறுநரின் உடலில் நோயெதிர்ப்புப் பாதிப்புகள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
உடல் மெலிந்தவர்கள் அல்லது உடல் எடையைக் குறைக்க மருந்துகளைப் பயன்படுத்திச் சதை தளர்ந்தவர்கள் இந்த சிகிச்சையை நாடுகின்றனர்.
இதற்கு மயக்க மருந்து தேவைப்படாது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த ‘கொழுப்பு ஊசி’ போடப்பட்டு விடுகிறது.
இந்தச் சிகிச்சைக்கு அதன் அளவைப் பொறுத்து $10,000 முதல் $100,000 வரை செலவாகிறது. இருப்பினும், இதில் உள்ள ஆபத்துகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்:
தொற்று ஏற்படுதல், கொழுப்புத் திசுக்கள் இறந்து போதல் (Necrosis), இரத்த நாளங்களில் கொழுப்பு அடைப்பு (Embolism) போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
பமார்பகப் புற்றுநோய் போன்ற சோதனைகளைச் செய்யும்போது, இந்தச் செயற்கைக் கொழுப்பு முடிவுகளைக் குழப்பக்கூடும்.
“உயிரைக் காக்கும் மருத்துவத் தேவைக்காகத் தனது திசுக்களைத் தானம் செய்பவர்கள், அவை இதுபோல அழகுசாதனப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுவதை விரும்புவார்களா?” என்ற தர்மசங்கடமான கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அமெரிக்க சுகாதாரத் துறை இது குறித்த பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் விதிமுறைகளை ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
