பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஷேஷாத் டவுன் பகுதியில் இருக்கும் தர்லாய் இமாம்பர்கா மசூதியில், நேற்று மதியம் மக்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது பயங்கரமான தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மசூதியின் பிரதான வாசல் வழியாக உள்ளே நுழைய முயன்ற தற்கொலை குண்டுதாரி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தடுத்ததும், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். இந்த கோர விபத்தில் இதுவரை 15 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடித்த வேகத்தில் மசூதியின் நுழைவு வாயில் தரைமட்டமானதோடு, அருகில் இருந்த கட்டிடங்களின் கண்ணாடிகளும் சுக்குநூறாக உடைந்து சிதறின. சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களில், மனித உடல் பாகங்கள் சாலை முழுவதும் சிதறிக் கிடக்கும் காட்சிகள் பார்ப்போரைக் கலங்க வைக்கின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் நீதிமன்ற வாசலில் நடந்த தாக்குதலில் 12 பேர் பலியான நிலையில், இப்போது மீண்டும் ஒரு பெரிய தாக்குதல் நடந்திருப்பது பாகிஸ்தான் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த கொடூரச் செயலுக்கு தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
