இணைய உலகம் எப்போதுமே வினோதமான உணவு சோதனைகளுக்குப் பெயர்பெற்றது. ஆனால், தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைப்பதோடு, “இப்படியெல்லாமா யோசிப்பார்கள்?” என்று ஆச்சரியப்படவும் வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவரால் பகிரப்பட்ட வீடியோவில், இளம்பெண் ஒருவர் வெளிப்படையான பிளாஸ்டிக் காலணிகளைப் பயன்படுத்துகிறார். அந்தக் காலணியின் அடிப்பகுதியில் ஒரு இடைவெளி உள்ளது. அதில் அவர் மிகவும் ரசித்துச் சமைத்த ‘பட்டர் சிக்கன்’ குழம்பை ஊற்றுகிறார். பின்னர் அதன் மேல் பகுதியை மூடிவிட்டு, செருப்பை அணிந்து கொண்டு மிகச் சாதாரணமாக நடக்கிறார்.
அத்தோடு நில்லாமல், நடுவழியில் அமர்ந்து செருப்பின் அடிப்பகுதியில் உள்ள குழம்பை ஸ்பூன் மூலம் எடுத்துச் சாப்பிடுகிறார். இந்தப் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘டிஜிட்டல்’ தீயாய் பரவி வருகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகவும், அதிர்ச்சியாகவும் பதிவிட்டு வருகின்றனர்: “மதிய உணவிற்கு இரண்டு செருப்பையும் சாப்பிடுவீர்களா? அல்லது ஒன்றை இரவு உணவிற்கு வைத்துக் கொள்வீர்களா?” என ஒரு பயனர் கிண்டல் செய்துள்ளார். “இது ஒரு சாபக்கேடு” என்றும், “உங்களது நகம் அதில் விழுந்தால் என்னவாகும்?” என்றும் பலர் அருவருப்புடன் கமெண்ட் செய்துள்ளனர்.
“ஒரு காலில் குழம்பு, மற்றொரு காலில் சாதம்.. பயணத்தின் போது சாப்பிடச் சரியான வழி!” என சிலர் விளையாட்டாகப் பதிவிட்டுள்ளனர். மேலும் பொதுவாக சமூக வலைதளங்களில் அதிகக் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், ‘வியூஸ்’ (Views) பெறுவதற்காகவும் படைப்பாளிகள் இது போன்ற வினோத செயல்களில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. என்னதான் இது ஒரு பொழுதுபோக்கு வீடியோவாக இருந்தாலும், உணவையும் காலணியையும் இணைப்பது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
