தென்காசி மாவட்டத்தில், ஆடு மேய்ப்பது தொடர்பான முன்விரோதத்தால் கல்லூரி மாணவர் விக்னேஷ் மற்றும் அவரது தாய் மாடத்தி ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது, மற்றொரு தரப்பினருடன் மோதல் ஏற்பட்டு இருதரப்பும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்தக் கல்வீச்சு சம்பவத்தில் 4 பேருக்குக் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தலைமையிலான போலீசார், கல்வீச்சில் ஈடுபட்ட 4 பேரைக் கைது செய்தனர்.

தப்பியோடிய முத்துப்பாண்டியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது சில இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.