சென்னையில் ஜி.எஸ்.டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவரின் மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட தீவிர ஆர்வத்தால் தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார்.

புதுவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த அவர், எப்படியாவது டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடிவிட வேண்டும் என்ற இலக்கோடு தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட டி20 போட்டிக்கான வீராங்கனைகள் பட்டியலில் ஏஞ்சல் கங்கவாணியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையில் இருந்த அவர், கிரிக்கெட் கனவு நிறைவேறாத விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

ஒரு வளர்ந்து வரும் இளம் வீராங்கனை இப்படி ஒரு விபரீத முடிவை எடுத்திருப்பது விளையாட்டுத் துறையினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.