மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (MUDA) சார்பாக 14 நிலங்கள் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு ஏற்பட்டதாகக் கூறி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பார்வதி மீது அமலாக்கத்துறை (ED) விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில், பார்வதிக்கு அனுப்பப்பட்ட சம்மனை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில், நேற்று நடந்த விசாரணையின் போது, உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறையின் செயல்முறைக்கு கடும் அதிருப்தி தெரிவித்தது. “அரசியல் சண்டைகள் மக்களிடையே நடக்கட்டும்… உங்களுக்கு என்ன வேலை?” என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசியல் ஆதாயம் நோக்கி அமலாக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் எச்சரித்தனர்.

தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “இவ்வழக்கில் ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் விசாரணை நீதிமன்றம் இரட்டைப் நிலை தீர்ப்பு வழங்கியுள்ளன. அதனை மீறி மீண்டும் வழக்கு தொடர முயற்சிப்பது தேவையற்றது” எனக் குறிப்பிட்டது. இதையடுத்து, ED சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால், உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததாக அறிவித்தது.