ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ. பானு பிரகாஷ், முன்னாள் அமைச்சர் மற்றும் பிரபல நடிகையான ஆர்.கே. ரோஜா மீது, அரசியலில் ஊழல் செய்து ரூ.1,000 கோடி வரை சொத்து சேர்த்ததாக தீவிர குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்காக அவரது சொத்துக்கள் மற்றும் வீடுகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, ரோஜா இதுகுறித்து வெளியிட்டுள்ள கடும் பதிலில், “நான் 1991ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். சினிமா, விளம்பரங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கடை திறப்புவிழாக்கள் என பல்வேறு வாயிலாக நான் சிரமப்பட்டு சம்பாதித்த பணத்திலேயே ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் வீடுகளை வாங்கினேன். நான் நகரி தொகுதியில் எம்.எல்.ஏ. ஆன பிறகு மட்டும்தான் அங்கு ஒரு வீடு கட்டிக்கொண்டேன். எனது எல்லா சொத்துகளுக்கும், வருமானத்துக்கும் உரிய கணக்குகள் உள்ளன,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊழல் செய்தேன் எனச் சொல்கிறார் பானு பிரகாஷ். உண்மையா? நிரூபிக்கட்டும்! நிரூபித்தால் நானே அரசியலிலிருந்து விலகத் தயார். ஆனால் நிரூபிக்க முடியவில்லையெனில் பானு பிரகாஷ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து அரசியலிலிருந்து விலக தயாரா?” என்ற சவாலையும் முன்வைத்துள்ளார்.

இந்த சம்பவம் தற்போது ஆந்திர அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.