குஜராத்தின் சூரத் மாவட்டம் கோஸம்பாவைச் சேர்ந்த 63 வயதான ஜைபுன்னிசா என்ற பெண், கடந்த 20 ஆண்டுகளாக காது கேளாமல் வாழ்க்கை மேற்கொண்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக திருமண விழாக்கள், சமூக விழாக்களுக்கு செல்ல முடியாமல் தனிமையில் வாழ்ந்துவந்தார்.
மிக விலையுயர்ந்த கேட்கும் சாதனங்களுக்கும் அவருக்கு உதவவில்லை. இதனால், “மகன்கள் வெளிநாட்டில் இருப்பதால் இவர் அகந்தையுடன் இருப்பதாக” பக்கத்து வீட்டார் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில், அவருக்கு ஒலி கேட்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்காக “காக்ளியர் இம்பிளாண்டு” எனும் காது சிகிச்சை திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்கு முன் ஒரு அற்புதம் நடந்தது. ஜைபுன்னிசா கூறும்போது, “ஒருநாள் வீட்டில் இருக்கும்போது திடீரென சத்தங்கள் கேட்கத் தொடங்கியது. உடனே கணவரிடம் சென்று கூறினேன். பிறகு பக்கத்து வீட்டாரிடம் சென்று அவர் பேசுவதை வைத்து காது கேட்பதை உறுதி செய்தோம்.”
இந்த மாற்றம், அவருக்குச் செய்யப்பட்ட பல பல் சிகிச்சைகள், பல் பொருத்துதல், நரம்பு சீரமைப்புகள் போன்றவற்றுக்குப் பிறகு ஏற்பட்டது. இது குறித்து பல் நிபுணர் டாக்டர் ரிஷி பட்ட் கூறுகையில், “பல் சிகிச்சையின் போது நரம்புகள் மீது இருந்த அழுத்தம் அகற்றப்பட்டது. அதனால் தான் கேட்கும் திறன் திரும்பியிருக்கலாம்” என்றார்.
இதையடுத்து, ENT நிபுணர்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த காக்ளியர் சிகிச்சை ரத்து செய்யப்பட்டது. ஜைபுன்னிசாவின் கேட்கும் திறனில் ஏற்பட்ட மேம்பாடுகளால் மருத்துவர்கள் அசந்துபோனனர். தற்போது, தொலைபேசியில் சுதந்திரமாக பேசவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அவர் தயாராக உள்ளார்.
அவரது கணவர் டாக்டர் அபாஸ் கூறும்போது, “முதலில் நம்பவே முடியவில்லை. ஆனால் இறைவனுக்கே நன்றி,” என்றார். இந்த நிகழ்வு, பல் சிகிச்சைகள் மனித உடலின் பிற பகுதிகளிலும் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான மிக முக்கியமான எடுத்துக்காட்டாக இருக்கிறது.
