ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே உள்ள தோட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ஹோட்டல் ஊழியர்கள் தோட்டத்தில் ஒரு பெரிய நாகப்பாம்பை கண்டனர். உடனடியாக வனவிலங்கு மீட்பு மையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனவிலங்கு குழு, அந்த நாகப்பாம்பை தேடும் வேலையில் இறங்கியது. குப்பைகள் அகற்றப்பட்டபோது,  18 குட்டி பாம்புகள் மற்றும் ஒரு பெரிய நாகப்பாம்பு என மொத்தம் 19 பாம்புகள் ஒரே இடத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தகைய ஒரு பெரிய எண்ணிக்கையிலான நாகப்பாம்புகள் ஒன்றாக இருப்பதை பார்த்த மக்கள் மிகுந்த பதற்றத்துடன் இருந்தனர். இதுதொடர்பாக வனவிலங்கு மீட்பு மைய தலைவர் சாமன் சிங் சவுகான் கூறுகையில், “பாம்புகள் தங்களது குட்டிகளை சில நேரங்களில் சாப்பிடும் பழக்கம் உண்டு.

ஆனால், இங்கு பெரிய நாகப்பாம்பு தனது 18 குட்டிகளை பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் அபூர்வமானதொரு நிகழ்வாகும்” என்றார். இந்த குட்டிகள் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்ததாக இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

தோட்டத்தில் மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் அதிகம் சேர்த்ததால், அது பாம்புகளுக்கு வசதியான வாழ்விடமாக மாறியிருக்கலாம் என்றும், அருகில் நீர்வளம் இருந்ததால் உணவுக்காக எலிகள் போன்று மிருகங்கள் கிடைத்ததாலும் பாம்புகள் அங்கு தங்கியிருக்கலாம் என கூறப்பட்டது.

தற்போது அனைத்து நாகப்பாம்புகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.. இந்த சம்பவம், பாம்புகளின் இயற்கை நடத்தையைப் புரிந்துகொள்ளும் வகையில் விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.