உண்மையான காதலும், ஈரான உணர்வுகளும் இன்னும் வாழ்கின்றன என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் உத்திரபிரதேச மாநிலம் முசாபர்நகர் சேர்ந்த ஆஷா என்ற பெண். கன்வார் யாத்திரை என்ற புனித பயணத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட கணவர் சச்சினை தனது தோளில் சுமந்து, ஹரித்வாரிலிருந்து மோடிநகர் வரை 150 கிலோமீட்டர் நடந்துள்ளார்.

இரு சிறிய பிள்ளைகளுடன் இந்த கடினமான பயணத்தைத் தொடங்கிய ஆஷா, “ஒருநாள் என் கணவர் மீண்டும் நடக்க வேண்டும்” என்ற நம்பிக்கையோடு இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக சச்சின் நடக்க இயலாத நிலையில், அவர் தமது 13 ஆண்டுகால கன்வார் யாத்திரையை தவிர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், அவரது கனவையும் நம்பிக்கையையும் தூக்கிச் செல்ல ஆஷா துணிந்தார்.

இந்த நெகிழ்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. “@pratik_khare _” என்ற X பயனர் இந்த வீடியோவை பகிர்ந்ததுடன், “ஹரித்வாரில் ஒரு பெண் தனது கணவரை தோளில் சுமந்து, சிவபெருமானை வழிபட்டார். இது சவான் மாத பக்தியின் உண்மையான வடிவம்” என எழுதியுள்ளார்.

இந்த வீடியோ பலரது கண்களில் கண்ணீரை தட்டி உள்ளது. நெட்டிசன்கள், “அன்பு, தைரியம் மற்றும் பக்தியின் பிரதிபலிப்பு”, “இந்திய பெண்மையின் உண்மையான வலிமை” என பல்வேறு வகையில் பாராட்டி வருகின்றனர்.